மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவு மழை நீரினால் மூழ்கும் அபாயம்
பிராந்திய நிருபர்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், மாந்தை கிழக்கு செயலகப் பிரிவு மழை நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் அப் பகுதியில் தற்போது மழை நீர் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் புதிதாக அமைக்கப் பெற்ற பாலங்களின் நிர்மாணப் பணிகளும் தடைப்பட்டுள்ளது.
50 வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள மக்களை வெளியேறி இடைத்தங்கல் நிலையத்திற்கு செல்லும்படி கிராம சேவகரால் அறிவிக்கப்பட்டிருந்தும் அம் மக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை.
டித்வா புயலினால் பாதிப்புற்ற மக்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டோ அல்லது புதிய வீடுகளோ குறித்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் அவர்கள் வெளியேறவில்லை என அறிய முடிகிறது.
மேலும் நட்டாங்கண்டல் சிறாட்டிகுளம் வீதியும் இன்னும் புனரமைக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. அவ் வீதியில் பாலம் அமைக்கப்பட்டுவந்த நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவுறாததால் அவ்வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
டித்வா புயலைப்போல் மற்றுமொரு அனர்த்தம் வருமாயின் அப்பகுதி மக்களால் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படும். நீர் வடிந்தோட ஏதுவான வழிகளை முன்னெடுக்க மாந்தை கிழக்கு பிரதேச செயலகம், மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியன தவறியுள்ளது.
மழை வீழ்ச்சி இந்த வருடம் அதிகம் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு இருந்தும் மக்களுக்கு தேவையான எதுவித முன்னேற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும் விவசாயமும் பாதிப்புறும் நிலையை அவதானிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |