நிலவில் வெற்றிகரமாக இறங்கிய சந்திராயன் 3 - விண்வெளித்திட்டத்தில் இந்தியா புதிய சாதனை
விண்வெளித்திட்டத்தில் புதிய பதிவு (இரண்டாம் இணைப்பு)
உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
சந்திரனின் தென் துருவப்பகுதியில் முதன்முதலில் தரையிறக்கத்தை மேற்கொண்ட வரலாற்றுப் பெருமையையுடன் இந்தியா முதன்முதலில் சந்திரனில் தனது நடவடிக்கையின் ஆரம்பத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்குப் பின்னர் இந்த மெதுவாக தரையிறங்கம் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இந்த செய்தியை இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி உலகுக்கு அறிவித்திருந்தார்.
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் தரையிறங்கு கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியமை இந்தியாவின் விண்வெளித்திட்டத்தில் புதிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
'India??,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon ?!.
Congratulations, India??!#Chandrayaan_3#Ch3
திட்டமிட்ட படி இந்த தரையிறக்கம் இடம்பெற்றதும் பெங்களுருவில் உள்ள சந்திராயன் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிலவியது.
முன்னதாக தரையிறக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு திட்டமிட்டபடி சென்ற இந்தக்கலம் அதன்பின்னர் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்பட்ட உத்தரவுடன் தரையிறங்கியுள்ளது.
நேரலையில் பிரதமர் மோடி
இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பட்டபோது தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அதனை நேரடியாக பார்வையிட்டிருந்தார்.
தரையிறங்கு கலத்தை மெதுவான மிதமான முறையில் தரையிறக்குவது மிகப் பெரிய சவாலாக கருதப்பட்ட நிலையில், அதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
சந்திரயாயன் திட்டத்தின் வெற்றிக்காக இன்று இந்தியா தழுவிய ரீதியில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விண்ணில் ஏவப்பட்ட தருணம்
615 கோடி இந்திய ருபாயில் வடிவமைக்கட்ட இந்தக் கலம் எல்விஎம்-3 உந்துகணைமூலம் கடந்த ஜூலை 14ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.
40 நாள் பயணத்துக்கு பின்னர் இன்று அது சந்திரனில் தரையிறங்கியுள்ளது.
சந்திரனில் மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலை
சந்திரனின் தென் துருவத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாத ஆழமான பள்ளங்களில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதாக கருதப்படுவதால் சந்திரனில் மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் சோதனைகளுக்கு உந்துசக்தியாக இந்த ஆய்வுகள் மாறும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தவாரம் இதேபோன்ற ஒரு தரையிறக்கத்தை செய்ய முயன்ற ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் சந்திரனில் விழுந்து நொறுங்கிய நிலையில், சந்திரயானின் இன்றைய நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் சாதனை பதிவு
இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இறுதிக் கட்ட நடவடிக்கை (முதலாம் இணைப்பு)
உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
நிலவில் தரையிறங்கும் கலத்தின் தரையிறக்க காட்சியை இன்று மாலை 5.20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தரையிறக்க காட்சி நேரலையாக
நிலவில் தரையிறங்கும் கலமான விக்ரமின் செயற்பாடுகள் தற்போதுவரை சீராக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
"நிலவில் விக்ரம் லாண்டரை தரையிறங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். தரையிறங்கிக் கலன் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாலை 5.44 மணிக்கு சென்றடையும்.
தானியங்கி தரையிறங்கி செயற்பாட்டு கட்டமைப்பிடம் இருந்து கட்டளையைப் பெற்றவுடன் தரையிறங்கி கலன், கீழே இறங்குவதற்காக அதிலுள்ள இயந்திரங்களை இயங்கச் செய்யும்.
நிலவில் விக்ரம் லாண்டரை தரையிறக்குவதற்கான குழு, கட்டளைகள் சரியான வரிசையில் பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்." என இஸ்ரோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV
வழக்கமான சோதனைகளை சீரான இடைவெளியில் விஞ்ஞானிகள் மேற்கொண்டுவரும் நிலையில், நிலவு நோக்கிய 'தரையிறங்கும் கலத்தின்' நகர்வு சுமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்டத்தில் 'தரையிறங்கும் கலத்தின்' செயல்பாடு இயல்புநிலையில் இருந்து வேறுபட்டால், தரையிறங்கும் திட்டத்தை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை நிலவுக்கு மேலே 30 கிலோமீற்றர் உயரத்தில் 'தரையிறங்கும் கலம்' இருக்கும்போது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கிலோமீற்றர் வேகத்தில் 'தரையிறங்கும் கலம்' செல்லும் என்பதுடன், இதன்போது நிலவின் ஈர்ப்புவிசையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், 'அதன்' வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த இருக்கின்றனர்.
நொடிக்கு நொடி கண்காணிப்பு
இதில் ஏதும் தவறு ஏற்படும் பட்சத்தில், நிலவின் தரையில் 'தரையிறங்கும் கலம்' மோதி சேதமடைய வாய்ப்புள்ளதால், நிலவை நெருங்கும் 'தரையிறங்கும் கலத்தின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன.
நிலவின் தரையில் பாதுகாப்பாக விக்ரம் தரையிறங்கும் கலம்' தரையிறங்கும் அந்த தருணத்தை இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த முயற்சி வெற்றியடையுமாயின், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறங்கிய முதலாவது நாடாக இந்தியா வரலாற்று படைக்கும்.
விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.