இரண்டு இலட்சம் பிரித்தானியர்களுக்கு அதிர்ச்சி தகவல் - செலவைக் குறைக்க புதிய திட்டம்
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் கீழ் எதிர்வரும் ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழியர் பணிக்குறைப்பை பிரதமர் லிஸ் ட்ரஸ்சின் அரசாங்கம் மேற்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்து அரசுக்கான செலவைக் குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக ஐ.எப்.எஸ் எனப்படும் நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
பிரித்தானியாவில் இவ்வாண்டு தொழில் வலுவில் இருந்து 5.6 பில்லியன் டொலரை சேமிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அரச ஊழியர் பணிக்குறைப்பு
அரச துறையினரின் சம்பளம் இவ்வாண்டு 05 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் ஒரு இலட்சம் அரச ஊழியர்களின் பணிக் குறைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் லிஸ் ட்ரஸ்சின் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய வேகத்தில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் ஒரு இலட்சத்தால் அடுத்த ஆண்டு குறைக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நெருக்கடியின் போது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனால் அதிகரித்து, 5.5 மில்லியனாக உயர்வடைந்திருந்தது.
வரிக்குறைப்பு திட்டங்கள்
இந்த நிலையில் 3.8 பில்லியன் டொலரை சேமிக்க வேண்டுமாயின், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் என ஐ.எப்.எஸ் இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
45 சதவீத உயர்மட்ட வருமான வரியை மீளெடுக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதன் பின்னணியில் குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.
குறிப்பாக வரிக்குறைப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து சந்தைகளிலும் கென்சவேட்டிவ் கட்சியிலும் கொந்தளிப்பான எதிர்வினைகளை தொடர்ந்து லிஸ் ட்ரஸ்சின் அரசாங்கம் தமது அறிவிப்பை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.