வடக்கில் திசைகாட்டியை துரத்திய தமிழரசுக் கட்சி
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றி பெற்று பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி பாரிய பின்னடைவை தமிழர் பகுதிகளில் சந்தித்துள்ளது.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ. பி. டி. பி.) இந்தத் தேர்தலில் பலத்த சரிவை சந்தித்துள்ளது. அந்தக் கட்சி பல இடங்களில் 4 அல்லது அதற்கு பின்னர் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மீண்டும் ஆதிக்கம்
இந்நிலையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு வந்த தமிழ் அரசு கட்சி வடக்கு மாகாணத்தில் மீண்டும் தனது ஆதிக்கம் செலுத்துகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் மாநகர சபை பருத்தித்துறை பிரதேச சபை, நல்லூர் பிரதேசசபை, வலி. கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபை என்பவற்றில் இலங்கை தமிழ் அரசு கட்சி முன்னிலை வகிக்கிறது.
வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதுடன் யாழ். மாநகர சபை உட்பட பல சபைகளில் தமிழ் அரசுக் கட்சிக்கு நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
உத்தியோகபூர்வ முடிவுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் இரண்டு சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெற்றுள்ளது.
பூநகரி பிரதேச சபையில் ஓர் ஆசனத்தால் பெரும்பான்மை பெறத் தவறியுள்ளது.
அங்கு கூட்டாக அல்லது மற்றொரு தமிழ்த் தேசிய கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ் அரசு கட்சி தனித்து ஆட்சி அமைக்க கூடிய ஆசனங்களை வென்றுள்ளது. மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேசசபைகளில் அந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது.
