திகதி குறிப்பிடாது ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் - பாரிய குற்றச்சாட்டிற்குள் சிறிலங்கா!
இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் பெரும் பங்காற்றியிருப்பதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருந்த போதிலும் அரசாங்கத்தின் தலையீட்டால் ஆணைக்குழு தற்போது அதனை இழந்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறையை மாற்றலாம்
இந்த நிலையில், பல மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்துக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் தேர்தல் நடைபெறும் முறையை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தேசிய எல்லை நிர்ணய குழுவை அமைத்து தேர்தலை ஒத்திவைக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முயற்சியை சுட்டிக்காட்டிய ரோஹன ஹெட்டியாரச்சி, எதிர்காலத்திலும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கான செலவு
இதேவேளை, இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 1.1 பில்லியன் ரூபா மாத்திரம் தேவைப்படுவதாகவும், இதனை இல்லை என சொல்ல அரசாங்கத்துக்கு எந்தவொரு காரணமும் இல்லை எனவும் ரோஹன ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
