இலங்கை அரசு தேர்தலை பிற்போட்டு மீண்டுமொரு மக்கள் போராட்டத்திற்கு வழி செய்கிறது!
"தேவையற்ற விடயங்களை கூறி இலங்கை அரசாங்கம் தேர்தலை பிற்போட எண்ணுவது மீண்டுமொரு மாபெரும் மக்கள் போராட்டத்தை தோற்றுவிக்கும் செயலாகும்."
இவ்வாறு, 43 வது படையணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 43 வது படையணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் போராட்டம் வெடிக்கும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"இதுவரைக்கும் அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு 21 தடவைகள் முயற்சி செய்துள்ளதுடன், மீண்டும் 22 தடவையாக தேர்தலுக்கான பணத்தை வழங்குவதில் இழுபறி செய்கிறது.
அரசின் தேர்தலை ஒத்திப்போடும் நடவடிக்கையானது மக்களின் இறையாண்மைக்கு ஏற்படும் பெரும் பாதிப்பாகும், இது மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வழி வகுக்கும்.
பயங்கரவாத சூழ்நிலை, சுனாமி தாக்கம் மற்றும் கொரோனா நோய்த் தொற்று போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் இந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றிருந்தது.
இந்தநிலையில், அரசாங்கத்தின் குறித்த செயல்பாடு, கோட்டாபயவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்." என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
