வவுனியாவில் மட்டும் ஏன் இப்படி...!: பொதுமக்கள் கடும் விசனம்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் ஒருவருடைய அடையாள அட்டை இலக்கம் இல்லாத போதும், எவரையும் நிராகரிக்காது வவுனியா(vavuniya) மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளமை மக்களை விசனமடைய வைத்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 20 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருந்தது. இதன்போது பல மாவட்டங்களில் பல்வேறு காரணங்கள் கூறி பல வேட்பு மனுக்கள் நிரகரிக்கப்பட்டிருந்தன. அதில் 22 வேட்புமனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செயயப்பட்டும் உள்ளது.
பதிவு செய்யப்படாத தேசிய அடையாள அட்டை இலக்கம்
இந்நிலையில், வவுனியா மாநகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த போது அதில் நேரடி வேட்பாளராக 10 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரது விபரங்கள் பதியப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் குறித்த வேட்பாளரது தேசிய அடையாள அட்டை இலக்கம் பதிவு செய்யப்படாது விண்ணப்பித்துள்ளார்கள்.
குறித்த விண்ணப்பங்களை மேற்பார்வை செய்த வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களும், அதனை சரி என ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் வேறு சில இடங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நபர்கள் நிராகரிக்கப்பட்ட போதும் வவுனியாவில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
வவுனியாவில் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை
உள்ளுராட்சி சட்ட விதிமுறை பொதுவானதாக காணப்பட்ட போதும் வவுனியாவில் ஏன் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

