உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளருக்குச் செலவிடக்கூடிய தொகை குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) இவ்வாறு அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான 74 ரூபா, மன்னார் உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகையான 160 ரூபா லஹுகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தால் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
