பயணத் தடை தளர்வின் போது தனியார் போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு!
நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுபாட்டினை தொடர்வது குறித்தும், திருமண நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், களியாட்ட நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தடைவிதிப்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படுமாயின் தனியார் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை பயணத்தடை நீக்கப்படும் பட்சத்தில் நூற்றுக்கு 50 வீதமான பஸ் சேவைகளை சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் நிவாரணத் தொகையொன்றை வழங்குமாயின் இரண்டு ஆசனங்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் முழுமையான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொடருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.