பொறிஸ் ஜோன்சன் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்கள்
பிரித்தானியாவில் கடந்த வியாழன் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கென்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாதக் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதால் பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடமுள்ள கட்சியின் தலைமைத்துவ பொறுப்புக்கு இனி சவால் வருவதை தடுக்க முடியாததென கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் கட்சிக்கு அவரது தலைமைத்துவத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரணை போன்ற நகர்வுகள் எடுக்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ஏறக்குறைய 500 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி ஆசனங்களை இழந்துள்ள பழமைவாதக் கட்சி ஏற்கனவே தன்னிடம் இருந்த 11 சபைகளையும் பறிகொடுத்துள்ளது.
குறிப்பாக லண்டன் பிராந்தியத்தில் தொழிற்கட்சியிடம் அது கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
லண்டனில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தமிழ்மக்கள் கணிசமாக வாழும் ஹரோ நகரசபையில் அதற்கு அதிர்ச்சி வெற்றியை கிட்டிள்ளது.
இந்த வெற்றி மூலம் 2006 ஆண்டுக்குக்குப் பின்னர் முதன்முறையாக ஹரோநகரசபை பழமைவாதக் கட்சியின் நிர்வாகத்துக்குள் சென்றுள்ளது. இங்கு 31 பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
தொழிற்கட்சிக்கு 24 இடங்கள் கிட்டியுள்ளன. ஏழு ஆசனங்களின் பெரும்பான்மையுடன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஹரோவுக்கு கென்சவேட்டிவ் நிர்வாகம் உருவாகியுள்ளது.
ஹரோ நகரசபைக்கு போட்டியிட்ட இலங்கைபூர்வீக தமிழ்வேட்பாளர்களில் நால்வர் வெற்றிபெற்றுள்ளனர். ரெயினஸ் லேன் வட்டாரத்தில் தொழிற்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சுரேஷ் கிருஷ்ணாவும் கென்சவேட்டிவ் கட்சியில் போட்டியிட்ட தயா இடைக்காடரும் வெற்றிபெற்றுள்ளனர்.

