AI தொழில்நுட்பத்தால் மூளைக்கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை
நேரடி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளைக் கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷயரை சேர்ந்த 48 வயதுடைய ரைஸ் ஹிபர்ட் என்பவரின் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்த கட்டியை இவ்வாறு அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லண்டனில் உள்ள தேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவமனையின் (NHNN) மருத்துவர்களால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூளைக் கட்டி அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சையின் போது, AI தொழில்நுட்பம் மூளையின் நேரலைக் காட்சிகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் உள்ளிட்ட பகுதிகளைத் தனித்தனியாக அடையாளம் காட்டியுள்ளது.

இதன் மூலம், கட்டியை அகற்றும்போது தவிர்க்கவேண்டிய பகுதிகளை துல்லியமாக கண்டறிய முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிட்யூட்டரி சுரப்பி, இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளதால், அறுவை சிகிச்சையின் போது சிறிய அளவிலான தவறுகூட பார்வையைப் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2024ஆம் ஆண்டு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட ஹிபர்ட், அறுவை சிகிச்சை மூலம் தனது பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீண்டும் தனது பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த AI தொழில்நுட்பம் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் (UCL) ஆராய்ச்சியாளர்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மூளை அறுவை சிகிச்சைக் காணொளிகளைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |