தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் அனைத்துலக விசாரணை- தொடரும் பரப்புரை செயற்பாடுகள்
இலங்கையில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் அனைத்துலக விசாரணைகோரும் பரப்புரை செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
ஐ.நா மனிதஉரிமை பேரவை செப்டெம்பர் அமர்வுகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த அமர்வை மையப்படுத்தி இடம்பெறும் புலம்பெயர் அமைப்புக்களின் பரப்புரை செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இவை இடம்பெற்றுவருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் இன்று 3 ஆவது நாளை நெதர்லாந்தின் பிறேடா நகர் ஊடாக கடந்து வருகிறது.
இதேபோல பிரான்சில் உள்ளூராட்சி கட்டமைப்புகளை சந்தித்து தமிழினத்துக்கு நீதிகோரும் பரப்புரை செய்பாடுகள் இன்று நான்காவது நாளில் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக உரிமை சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு இடம்பெற்றுவருகின்றது.
இன்றைய நான்காம் நாளில் பல நகரசபைகளில் சந்திப்பை நடத்திய இந்த குழு இறுதியில் இன்று மாலை மெற்ஸ் நகரசபையில் தனது சந்திப்பை நிறைவுசெய்த பின்னர் இன்றைய நான்காம் நாள் செயற்திட்டத்தை நிறைவுசெய்துள்ளது.