விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் ஈச்சிலம்பற்று (வெருகல்) பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்றையதினம் (12) வெருகல் - சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அதன்போது, முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இனத்தின் ஆத்மபலம்
அதனை தொடர்ந்து, மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.
அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை.
கலந்துக் கொண்டோர்
தமிழ்த்தேசிய அரசியல் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன .” என்றார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட க்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் சங்கர், ஓய்வுநிலை அதிபர் இரத்தினசிங்கம், மற்றும் மாவட்டக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |