யாழ் மக்களே அவதானம் - விரிகுடாவில் நவம்பர் 14 ஆம் திகதி புதிய தாழமுக்கம்
எதிர்வரும் 14.11.2026 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இது ஆரம்பத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடைந்து அதன் பின்னர் வடக்கு நோக்கி இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகர்ந்து தமிழகத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ள நீண்ட கால வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கனமழை கிடைக்கும்
இது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இதனால் இலங்கையின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 15.11.2026 முதல் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக எதிர்வரும் 15,16,17 ம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மி.மீ. மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தாழமுக்கம் கிழக்கு மாகாணத்தை நோக்கி நகரும் போது, கிழக்கு, தெற்கு, ஊவா, மேற்கு மாகாணங்களும், இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அண்மித்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் போது வடக்கு, கிழக்கு,வட மேற்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவா மாகாணங்கள் கனமழையைப் பெறும். இப்பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை அண்மித்து நகரும் முதல் தாழமுக்கம் இதுவாகும்.
தற்போது இலங்கை முழுவதும் கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாகவும் இலங்கையின் தெற்கே காணப்படும் வளிமண்டல தளம் பல் நிலை காரணமாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 14.11.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
வெள்ள அனர்த்தம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள்
குறிப்பாக எதிர்வரும் 09ம் திகதிக்கு பின் மழை தீவிரமடையும். அந்த வகையில் நாளையும்(09.11.2026)நாளை மறுதினமும் (10.11.2026) எதிர்வரும் 11.11.2026 அன்றும் வடக்கு,மத்திய, சப்ரகமுவா, தெற்கு, மேற்கு, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அனர்த்த நிகழ்வுகள் ஏற்படக்கூடும். இதனால் தற்போது கிடைக்கும் தொடர்ச்சியான மழை காரணமாக எதிர்வரும் 14ம் திகதி அன்று நிலம் முழு ஈரப்பதக் கொள்ளளவை எட்டி விடும்.
சில இடங்களில் மழைநீர் சில இடங்களில் தேங்கி நிற்கும். இத்தகைய சூழலில் எதிர்வரும் 14 அன்று உருவாகவுள்ள தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே எதிர்வரும் 15,16,17 ம் திகதிகளில் கிழக்கு, வடக்கு, மேற்கு, வட மேற்கு ,மத்திய, தெற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இதனால் அம்பாந்தோட்டை,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் எதிர்வரும் 15,16,17,18 ம் திகதிகளில் காற்று மணிக்கு 35-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். இம்மாவட்டங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 25- 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |