மதுபோதையில் வாகனம் செலுத்தி முதியவரை மோதிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில்
பதுளையில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தி, 79 வயதுடைய பாதசாரி ஒருவரை மோதி காயப்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஹாலி-எல காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த நவம்பர் 6ஆம் திகதி பதுளை - ஸ்பிரிங் வெலி வீதியில் சுபத்தாராமய விகாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுநீர் பரிசோதனை
இந்த விபத்தில் குறித்த காவல்துறை அதிகாரி செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டி பாதசாரி ஒருவருடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் 11ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்படி 48 வயதுடைய காவல்துறை அதிகாரி மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தியதாகத் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர், குறித்த அதிகாரி மதுபானம் அருந்தியிருந்ததை உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளன.
அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும், மதுபோதையிலும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த காகல்துறை அதிகாரி நவம்பர் 7ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நவம்பர் 8ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |