இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு:8 புதிய துறைகளில் பணியமர்த்த திட்டம்
உணவுச் சேவைகள், சமூக சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் உள்ள மேலும் எட்டு தொழில்களுக்கு இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் வகையில் தனது பணி அனுமதித் திட்டத்தை சிங்கப்பூர் விரிவுபடுத்தியுள்ளது.
உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் முதலாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களினாலும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பதையும் இந்த அனுமதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இறைச்சிக் கடை, மீன் கடை மற்றும் அது தொடர்பான உணவுத் தயாரிப்பாளர்கள், உணவு மற்றும் குளிர்பானக் கடை உதவியாளர்கள், சமையலறை உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள், விமானப் பணிப்பெண்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் போன்ற தொழில்களுக்கே ஆட்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான சம்பளம்
பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன், இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் நாட்டினரைப் பணியமர்த்தத் தகுதியுள்ள ஒன்பது நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

விதிமுறைகளின்படி, NTS தொழில் பட்டியல் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் முதலாளிகள், குறைந்தபட்சம் S$2,000 நிலையான மாதாந்திரச் சம்பளத்தை வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள், தங்களின் மொத்தப் பணியாளர்களில் 8%ஐத் தாண்டாமல் இருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
விரிவாக்கப்பட்ட இந்தத் திட்டம், சிங்கப்பூரில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு, குறிப்பாக விருந்தோம்பல், உணவுச் சேவைகள், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில்களில் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
போதுமான உள்ளூர் ஊழியர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கும் தொழில்களுக்கு, வணிகங்கள் தொழிலாளர்களைப் பணியமர்த்த உதவுவதற்காக இந்த விரிவாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கை ஆரம்பத்தில் மார்ச் 2026இல் அறிவிக்கப்பட்டு, செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |