லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு
இரண்டாம் இணைப்பு
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் பணியாற்றும் விசேட வைத்திய அதிகாரி தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன எழுத்து மூலமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே குறித்த பணிப்புறக்கணிப்பு சற்றுமுன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு சீமாட்டி லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணிநேர அடையாள பணி விலகல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை, இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உள்ள விசேட பெண் வைத்திய நிபுணர் ஒருவரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அடையாள பணி விலகல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பெண் வைத்திய நிபுணரின் நடவடிக்கைகள் குறித்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஸ்ரீலங்கா சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத பின்னணியில், இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 24 மணிநேர அடையாள பணி விலகல் போராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவின் சேவையை பெற்றுக் கொள்பவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, காய்ச்சல் மற்றும் தடிமன் என்பவற்றுக்கான சிகிச்சைகள் இன்றைய தினம் வைத்தியசாலையில் வழங்கப்பட மாட்டாது என அவர் கூறியுள்ளார்.
எனினும், குழந்தைகளின் அவசர நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுமென ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து முன்னெடுக்கப்படும் மனித நேயமற்ற செயலாக இந்த பணி விலகல் ஆர்ப்பாட்டம் கருதப்படும் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வைத்தியர்கள் 24 மணிநேர அடையாள பணி விலகல் போராட்டத்தினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தூர பிரதேசங்களிலிருந்து சிகிச்சை பெறவதாக குழந்தைகளுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த போதிலும் பணிவிலகல் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.