தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் போராளி மாலதியின் நினைவேந்தல்..!
தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் நினைவு கூரப்பட்டுள்ளது.
1987 ஒக்டோபர் 10 ஆம் திகதி பெண் விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடி இந்திய இராணுவத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது கோப்பாய் கிறேசரடி பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதி வீரச் சாவடைந்தார்.
கோப்பாய் பகுதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகளால் மாலை 6.00 மணியளவில் விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.



கிளிநொச்சியிலும் அஞ்சலி
இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவரது திரு உருவ படத்திற்கு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நினைவு தினத்தில் கரைச்சி பிரதேச சபைஉறுப்பினர் கலைவாணி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள் த.ஜீவராசா மற்றும் ஜெயசித்திரா வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் தமிழ் தேசியப்பற்றாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

