திருச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை தொடர்பில் வெளியாகிய தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக, திருச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மக்கள் புரட்சியின் பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
அவற்றை எல்லாம் நாடு கடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மறுத்து வந்தனர்.
திருச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில், கேரளாவில் விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதும், இச்சம்பவம் தொடர்பாக, திருச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த, 2021ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திதி கேரள மாநிலம் கொச்சின் அருகே விழிஞ்சம் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்
அப்போது, ஒரு படகை மடக்கி பிடித்து, அதிலிருந்த, 300 கிலோ ஹெரோயின் போதைப் பொருள், 5 ஏ.கே - 45 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களை இலங்கை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, கடந்த, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி, கேரளா மற்றும் தமிழகத்தில் விரிவான சோதனையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தினர்.
அந்த சோதனையில், விடுதலைப்புலிகள் இயக்கம் சார்ந்த ஏராளமான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 7 தொலைபேசிகள், டப்லெட்கள், சிம்கார்ட்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைச் செய்யப்பட்ட இயக்கம் என்பதால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, நேற்று திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தேசிய புலனாய்வு முகமை, அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
துருவி துருவி விசாரணை
அங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், சிங்களவர்கள், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட, துணை இராணுப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
