லண்டனில் உள்ள துவாரகா உண்மையில் பிரபாகரனின் மகளா... விளக்கமளித்த தமிழ் எம்.பி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாக வெளியான கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் அவர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ்லாந்தில் நிதி சேகரிப்பு
இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் அது முறியடிக்கப்பட்டுள்ளதாகச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாகவும் அங்கு வந்தால் அவரை பார்க்கமுடியுமெனக் கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் உண்மையான தலைவரின் மகளா என்பதைச் சோதனை செய்வதற்காகக் கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்த நிலையில் அவர் போலியானவர் என்பது தெரியவந்துள்ளது.
பிரபாகரனின் மகள்
தன்னுடைய அனுபத்திலும் தனக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த அறிவிப்பு நிதி சேகரிப்பிற்காகவே வெளியிடப்பட்டது.
தனது குடும்பத்தையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.