தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரை புகழும் பௌத்த பிக்கு!
தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசனை முன்னாள் இராணுவச் சிப்பாயும் தற்போதைய பௌத்த பிக்குவுமான எகிரியே சுமன தேரர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
காவல்துறை பொறுப்பாளர் நடேசன் பற்றி அவர் தெரிவித்ததாவது,
மிக இள வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தான் கடமையாற்றிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை கைது செய்து காவல்துறை பிரிவில் தடுத்து வைத்திருந்தனர்
புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் என்னை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டார்.
அவர் ஒர் சிங்கள பெண்ணையே மணம் முடித்ததாகவும் அவருக்கு 17 வயதான மகன் இருப்பதாகவும் நடேசன் என்னிடம் தெரிவித்தார்.
தமிழர் ஒருவரை மணம் முடித்த காரணத்தினால் தெற்கில் வாழ்ந்த அவரது மனைவியின் உறவினர்கள், அவரை ஒதுக்கிவிட்டதாக தெரிவித்தார்.
நடேசன் என்னை ஒரு கைதியை போன்று நடாத்தாது மிகவும் சுதந்திரம் கொடுத்து அவரது பிள்ளையைப் போன்று மனிதாபிமானத்துடன் நடத்தினார்.
இராணுவத்திலிருந்து விலகினேன்
கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தினமே நடேசன் எனக்கு ஆடைகள் முதல் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்தார்.
சில மாதங்கள் விடுதலைப்புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட போதிலும் எனக்கு அனைத்து விதமான வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
புலிகள் என்னை விடுவித்த பின்னர் இராணுவத்திலிருந்து விலகி துறவறத்திற்கு சென்றேன். இமய மலையில் சமாதியாவதே எனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வன் மறைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காவல்துறைக்கு பொறுப்பாளராக இருந்த நடேசனை 2007, நவம்பர் 2 ஆம் நாள் அரசியல்துறைக்கு பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |