வடக்கில் மீண்டும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடே இது!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி தமிழ் அரசியல் கட்சிகளால் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் விதமாகவே இவ்வாறான செய்தி பரப்பப்படுவதாகவும், எனினும், மீண்டும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
13ற்கான அழுத்தமே
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் எந்த அடிப்படையில் தெரிவித்தார் என்பது எமக்கு தெரியாது. ஆனால், அவர் உயிராேடு இல்லை என்பதை சிறிலங்கா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் பெரிதுபடுத்திக்கொள்ளத் தேவையில்லை. அத்துடன், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் மூலம் வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
நீதிமன்றத் தீர்ப்பு
எவ்வாறாயினும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலேயே இந்த செய்தி பரப்பப்படுகிறது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதன்மூலம் நாடு பிளவுபடாது என கடந்த 1987 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
முற்றாக மாறிய வடக்கு கிழக்கு
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணம் பிரபாகரனின் ஆதிக்கத்துக்கு கீழே இருந்தது. தற்போது அந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் உறுதியாக இருக்கினறனர்” எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
