உலகின் சிறந்த தமிழ் வேளாண்மை விஞ்ஞானி காலமானார்
உலக நெல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட்ட ஆய்வு நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சுவாமிநாதன் தனது 98 வது வயதில் இன்று தமிழக தலைநகர் சென்னையில் காலமாகியிருந்தார்.
உலகில் நிலவிய பசிப்பிணியை ஒழித்து மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் இலக்குக்காக பல தசாப்தங்களாக பணியாற்றிய விவசாய அறிவியலாளர்களின் பட்டியில் எம்.எஸ் சுவாமிநாதனுக்கு முக்கிய இடம் உண்டு நீடித்து நிலைக்கவேண்டிய உணவுப் பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக உலக நெல் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பேரவை உட்பட்ட பல ஆய்வு நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் அவர் பணியாற்றியிருந்தார்.
தனது பணிக்காக பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதனை இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகளின் பட்டியலிலும் உலகப் புகழ் பெற்ற ரைம் இதழ் ஒருமுறை இணைத்திருந்தது.
இரங்கல் செய்திகள்
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட்ட விருதுகளை பெற்ற விவசாய விஞ்ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் மறைவு, அறிவியல் துறைக்கும் தமிழகத்துக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு என தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரும் தத்தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்