தேராவில் துயிலும் இல்ல இராணுவ பிரசன்னத்தை அகற்ற கோரிக்கை - மாவீரர் நாளை முன்னிறுத்தி அழைப்பு
முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் காணப்படும் இராணுவ அரண்கள் அகற்றப்பட்டு, நினைவஞ்சலியை நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் வழிவகை செய்ய வேண்டும் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மாவீரர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்குழுவின் தலைவர் கந்தையா யோகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
சிரமதான பணி
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்யும் வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று காலை ஒன்பது முப்பது அளவில் தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர், நலம் விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள், குடிசார் சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டு இந்த சிரமதான பணியை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
