வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் குறித்து மொட்டுக்கட்சி உறுப்பினர் கேள்வி
விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவ்வாறு இடமளிக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் மனோஜ் கமகே (Manoj Gamage) கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் (Osama bin Laden) அனுஷ்டிக்க நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
இங்கு அவர் மேலும் தெரிவிக்கயைில், ”வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஷ்டிக்க இடமளிக்க முடியும்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும்.
இராணுவ முகாம்களை அகற்றுதல்
தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
30 ஆண்டுகள் நீடித்த யுத்தம்
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும்.
இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |