மாவீரர் தின நினைவேந்தலுக்கு ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி மறுப்பு
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வரும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா. கிஷோரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அறிவுறுத்தல்
எனினும், தடைசெய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும், நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியதாக ஞா. கிஷோர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தமை தொடர்பில் காவல்து நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |