நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகுச்சேவை : வெளியான மற்றுமொரு அறிவிப்பு
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு படகுச் சேவையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மதுரை-புனலூர் இரவு நேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்குமாறு தொடருந்து பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் இந்தப் படகில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேரடி தொடருந்து சேவை இல்லை
எனினும் தற்போது நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நேரடி தொடருந்து சேவை இல்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மதுரை-புனலூர் தொடருந்தை நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்க வேண்டும் என, பயணிகள் சங்கங்கள் தொடருந்து துறையிடம் வலியுறுத்தியுள்ளன.
திருச்சி கோட்டத்தில் திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு நிலையங்களில் மட்டுமே தொடருந்து நிலையங்கள் உள்ளதாக தென் மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.
வாரத்தில் மூன்று நாட்கள் சேவை
எனினும் தொடருந்து சேவையை நீடிப்பது பராமரிப்பில் சவால்களை ஏற்படுத்தலாம். எனவே, இந்த தொடருந்தை வாரத்தில் மூன்று நாட்கள் நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 4 நாட்கள் திருச்சி வரை சேவையை நீடிக்கவும், அங்கு பராமரிப்பு மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |