மெகசின் சிறைச்சாலைக்குள் விழுந்த மர்மப் பொதியால் வெடித்த மோதல் - ஒருவர் பலி : பலர் காயம்
புதிய இணைப்பு
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலையில் உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதையடுத்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்ற நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய மகசின் சிறையில் நேற்று நடந்த கலவரத்தில் காயமடைந்த 11 கைதிகள் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) பதற்றமான சூழல்நிலை உருவாகியதுடன் போதைப்பொருள் தொடர்பான தகராறே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை ட்ரோன்
சிறைச்சாலைச் சுவருக்கு மேல் உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |