ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்சார விநியோகம்
வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீப்பற்றியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதிவேக தொடருந்துகள் உட்பட அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TSMC (சிப் தயாரிப்பு நிறுவனம்), Sony மற்றும் Fujifilm போன்ற முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை
ஆரம்பத்தில் சுமார் ஒரு மீற்றர் உயரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, எதிர்வரும் வாரத்தில் மேலும் நிலநடுக்க அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |