மஹாபொல கட்டணம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை- வசந்த முதலிகே குற்றச்சாட்டு
மஹபொல புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதோடு பல பல்கலைக்கழகங்களில் மஹாபொல தவணைக் கட்டணம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவை தொடர்பு கொண்டு வினவியுள்ளது. அவர், குறித்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்ததுடன் குறித்த புலமைப்பரிசில் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வெட்டுப்புள்ளி பெற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் ஆகியோருக்கு மாற்றமின்றி மஹபொல புலமைப்பரிசில் வழமை போன்று தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.