சிவராத்திரி தினத்தில் இந்துக்களுக்கு ஏற்பட்ட அவல நிலை
இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனின் முக்கிய விரதத்தை கூட அனுஷ்டிக்க முடியாத அவல நிலை தமக்கு ஏற்பட்டதாக வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் தம்பிராசா மதிமுகராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் காவல்துறையினரால் வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தடைகளால் கடந்த வருடத்தை போலவே இம்முறையும் மகாசிவராத்திரி நிகழ்வை நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலய வளாக பகுதியில் இராணுவத்தினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் சிலர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் மகாசிவராத்திரி நிகழ்வை நாம் அனுஷ்டித்து வந்தோம். எனினும் கடந்த இருவருடங்களாக அந்த பாக்கியம் எமக்கு கிடைக்கவில்லை. எமது வழிபடுவதற்கான சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது.
எனவே எமது ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் எமது மத சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் அனுமதியினை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.