தலைவர் பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்! பெயரை வெளியிட மறுக்கும் மகிந்த (காணொளி)
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், தமது ஆட்சிக்காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு தலைவரும் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று (15) நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டாக பிளவுபடவிருந்த இலங்கை
இதன் போது மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையை கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக் கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள்.
எனினும், நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.
30 வருட யுத்தத்தில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு தலைவராலும் எதிர்கொள்ள முடியவில்லை.
யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை
சில தலைவர்கள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.
அந்த தலைவர் யாரென நான் கூற மாட்டேன். இவ்வாறான யுத்தத்தை சிறிலங்காவின் மற்றுமொரு தலைவர் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை.
சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.
அரசியல் நோக்கங்களுடன் செயல்படுபவர்கள்
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது யுத்தம் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் தரப்பினர் இன்றும் இருக்கிறார்கள்.
இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி, தமது சொந்த நாட்டை பாதிப்படைய செய்கிறார்கள்.
கட்சி மீதான குற்றச்சாட்டு
தமது கட்சியின் ஆட்சி காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
எம்மை குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகிறார்கள்.
2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடைய செய்திருந்தோம்.
அரசியல் வழிநடத்தல்
இந்த நிலையில், இலங்கையை சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மிக குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை நாட்டை யாருடைய சொந்த தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.
மகிந்த பெருமிதம்
அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் பங்கெடுப்போம்.
பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றி பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாக காத்திருக்கின்றன” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |