பத்மேவுடன் தொடர்பு! நாளை சிஐடியி்ல் முன்னிலையாகும் நாமல்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்ற மண்தினு பத்மசிறி பெரேராவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளை(03) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு அரசியல்வாதிகள்
இந்நிலையில், கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளும் அடுத்த சில நாட்களில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய சிஐடிக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த விரும்பும் ஒரு பெண் அரசியல்வாதியும் அந்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்றும் தெரியவருகிறது.
பத்மே மற்றும் பிற குற்றவாளிகள் குறித்து சிஐடி அதிகாரிகள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதிகள் அடுத்த சில நாட்களில் அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அரசியல்வாதிகளின் தொடர்புகள்
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அரசியல்வாதிகள் பத்மேவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதன்படி, அரசியல்வாதிகள் பத்மேவுடன் நிதி பரிவர்த்தனைகள் செய்துள்ளனரா என்பதையும், குற்றங்களில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, பானந்துர நிலங்க, கமோண்டோ சாலிந்த மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் இந்தோனேசிய காவல்துறையினருடன் இணைந்து இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், கெஹல்பத்தர பத்மே, பானந்துர நிலங்க மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேற்கு வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |