பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் மகிந்த -முற்றாக மறுக்கிறது அவரது அலுவலகம்
இன்று மாலை அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டின்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் இறுதியில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது தற்போதைய நெருக்கடி நிலையில் பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவை அமையவேண்டியதன் அவசியம் குறித்து அரச தலைவர் கோட்டாபய விளக்கியுள்ளார்.
ஆனால் பிரதமர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது என்று அமைச்சர்கள் எடுத்துக்கூறியபோதும் அரச தலைவர் அதனை ஏற்கவில்லை என தெரிய வருகிறது.
‘ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பதவிகளை இராஜினாமா செய்வதில் அர்த்தமில்லை’ என்று பிரதமர் கூறியபோதும் அதனை ஏற்காத அரச தலைவர், இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதென்றும், அதன்பின்னர் புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் மகிந்த ராஜபக்ச இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

