வற் வரி தொடர்பிலான ரணிலின் கொள்கை! தனது நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த
சிறிலங்கா அரசாங்கத்தின் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு கொள்கை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பை எதிர்த்து தற்போது பொது மக்களும் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ள பெறுமதி சேர் வரி தற்போது மக்களுக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதென சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
வருமானம் அதிகரிப்பு
இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தற்போது பலர் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் வரிகள் குறைக்கப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடென அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்குமென மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முதன்மையான கடமை
கடந்த 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தமது அரசாங்கம் வரி கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ராஜபக்சக்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை அமைப்பது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |