மஹிந்தானந்தவிற்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு
கொழும்பு உயர் நீதிமன்றம் அண்மையில் விதித்த தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் (Mahindananda Aluthgamage) வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக "ஊழல்" குற்றத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மஹிந்தானந்த அளுத்கமகே குறித்த தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத்தண்டனை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தமக்கு தண்டனை விதித்ததாகவும், அபராதத்துடன் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை வழங்குவதில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சில உண்மைகளை தவறாகப் புரிந்துகொண்டதாகவும் விசாரணையின் போது பிரதிவாதிகள் முன்வைத்த சில விடயங்களை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானது என்றும், குறித்த தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவித்து அந்த மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        