சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு மைத்திரியே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே துமிந்த திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான 21 நீதிமன்ற வழக்குகளில் 20 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. தயாசிறி ஜயசேகர தொடர்பான ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்
கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பொதுச்செயலாளராகத் நானும், தேசிய அமைப்பாளராக சாமர சம்பத்தவும் செயற்பட்டு வருகிறோம். கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் அனைத்துச் சிக்கல்களுக்கும் பிரதான காரணமாவார்.

விஜயதாச ராஜபக்சவை தலைவராக்கியதும், 52 நாள் அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியது மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர அனுமதித்தது போன்ற தவறான தீர்மானங்களை மைத்திரிபால சிறிசேன எடுத்தார்.
பசில் ராஜபக்சவின் தூண்டுதலாலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அத்துடன், சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியதன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது.
2015 மற்றும் அதற்கடுத்த காலங்களில் சுதந்திர கட்சியின் அரசியல் தீர்மானங்களில் பசில் ராஜபக்சவின் செல்வாக்கு இருந்தது. அப்போது பசில் ராஜபக்ச, ஜனாதிபதியையும் தாண்டிச் செயற்பட்டு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களைப் புறக்கணித்தார்.
பசில் ராஜபக்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை
அதேபோல், அவரால் இன்று கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறைக்கு செல்ல நேரிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பசில் ராஜபக்சவை இணைத்துக்கொண்டது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.

இவ்வாறு இந்த நிலைமைக்குக் காரணமான பசில் ராஜபக்சவை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2022 இல் நாடு பொருளாதார ரீதியில் முடங்கியபோது, நாட்டின் நலனைக் கருதியே அனுபவமிக்க ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தோம்.
சுதந்திரக் கட்சியிலிருந்து விலகித் தற்காலிகமாக வேறு கட்சிகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தின் கீழ் தாய் வீட்டிற்கு திரும்புவார்கள்.
எதிர்வரும் காலத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் கொள்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் ஆகும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |