அரசாங்கத்திடம் கால அவகாசம் கோரும் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற அரசாங்கத்திடம் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மைத்திரிபால சிறிசேன தற்போது வசித்து வரும் கொழும்பு, கெப்பட்டிபொல மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேற எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் கால அவகாசம் கோரியுள்ளார்.
உத்தியோகபூர்வ வாகனங்கள்
எனினும், தற்போது அவர் தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேன, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் குடியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
எனினும், அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
