சுமந்திரனை சவாலுக்கு அழைத்த மைத்திரி
நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாடு ஒன்று மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்த அவர், அப்படியென்றால் அந்த உடன்படிக்கையை தற்போது சரி காட்டுமாறு தான் சவால் விடுவதாக கூறியுள்ளார்.
நீங்கள் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் உங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏதாவது எழுத்து மூலமாக ஆவணங்கள் கைச்சாத்திடப்பட்டனவா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“எந்தவொரு உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எண்பது வீதமான தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்திருந்தார்கள். தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்போ அவர்களுடன் எந்தவொரு எழுத்து மூலமான உடன்படிக்கையினையும் நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை” என்றார்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அதில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் உங்களுக்கும் இடையிலேயே எழுத்து மூலமாக ஆவணம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் “அந்த ஆவணத்தை சில நாகரிகம் கருதி வெளியில் காட்ட முடியாத நிலைமை இருக்கிறது எனக் கூறியிருந்தாரே! இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கிறது?
“அவர் அப்படியாக கூறியிருந்தால் அந்த உடன்படிக்கையை காட்டுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன்.
எட்டு, ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது - இனியாவது காட்டலாம். அவ்வாறான உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடவும் இல்லை, நான் உடன்படிக்கைகளை நம்புவதில்லை. இப்படியான உடன்படிக்கை ஒன்றும் தேவையில்லை. மனச்சாட்சிப் படி வேலை செய்தாலே போதுமானது.
அதேபோல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினது ஆதரவு என்பது தனிப்பட்ட ரீதியில் எனக்கு மட்டுமல்ல அது நல்லாட்சியை உருவாக்குவதற்காக கொடுக்கப்பட்ட ஆதரவு” - என்றார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்