திராணியற்ற தலைவர்களின் திராட்சைப் பரிமாற்றம்
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் இன்று மூன்றாவது நாளாக சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடர்கிறது.
ஒரு முன்னாள் அதிபரின் வருகை இவ்வளவு அலட்டிக்கொள்ளக்கூடிய விடயமா? என்ற கேள்விகளை ஏற்படுத்தும் படியாக அங்கஜன் இராமநாதனின் ஆட்களின் ஒழுங்குகளும், ஒத்தூதல்களும் இருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இது எல்லாம் இருக்க, தமிழர் தரப்பு மைத்திரியிடமிருந்தும் அவரின் இந்த யாழ் வருகையில் இருந்தும் அப்படி என்ன வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப்போகிறது என்ற வினா மறுபுறம் கிளம்பியுள்ளது.
மைத்திரிபால சிரிசேன, சிறிலங்கா அரசின் முன்னாள் அதிபர் எனும் வரப்பிரசாதங்களை அனுபவித்துக்கொண்டு எஞ்சிய காலத்தை ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக கடத்திக்கொண்டிருக்கும் கையறுந்துபோன அரசியல்வாதி.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கும் அதற்காக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குமான தண்டப்பணத்தை செலுத்தக்கூட முடியாத நிலையில், புறக்கோட்டையில் யாசகம் தான் பெற வேண்டும் எனக் கூறிய ஒரு தலைவரிடம் தமிழ்த்தரப்பு அப்படி என்ன தீர்வை எதிர்பார்க்கிறது.
தன்னுடைய சொந்தக்கட்சி அதுவும் நாட்டில் மிக நீண்டகாலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி, இன்று ஒதுங்க ஓரிடமில்லாமல் ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தள்ளாடிக்கொண்டிருக்க அதற்கு தலைமைத்துவம் வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர் இவர்.
இதையெல்லாம் தாண்டி அதிபராக இருந்தபோது தமிழ் மக்களை நம்ப வைத்து அவர்களுக்கு ஏதோ ஒன்று செய்வேன் என்று ஆட்சி பீடம் ஏறி, மகிந்தவை புறவாசல் வழியாக அழைத்து வந்ததை தவிர வேறு என்ன செய்தார்.
தாயை இழந்து நிற்கதியாக நின்ற ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்காகக் கூட தந்தையை விடுதலை செய்யக்கூட முடியாத வக்கற்றவராக இருந்தவர்.
இன்று தமிழர்களின் பிரச்சனைகளைப்பற்றி பேச யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்திருக்கிறாராம் பட்டாளங்களோடு.
அதிகாரம் இருந்த போது செய்ய முடியாததை இப்போது எப்படி செய்வார், தன்னை காக்கவே வழி இல்லை இதில் தமிழர்களுக்கு தீர்வா.
மைத்திரியின் நிலை அப்படி இருக்கையில், வீதியில் பாய் போட்டு படுத்துக்கிடந்து பெருந்தலைவரென்று பவனிபோக ஒரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் வலம் வருகிறது.
இப்படியெல்லாம் ஊர்சனம் ஒன்றொன்றாக பேசிக்கொண்டு திரிய நமக்கேன் வம்பென்று ஒரு பக்கமாக நின்று வேடிக்கை பார்ப்போம் என்றால், இன்னொரு பக்கமாக நாங்கள் தமிழர்களின் ஏகபிரதிகள் தமிழர்களின் விடிவே எமது இலக்கு என்றெல்லாம் கொக்கரித்துக்கொள்ளும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மைத்திரியுடன் குலாவிக் கொண்டாராம் இன்று.
தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைப்பற்றி அதற்கான தீர்வுகளைப்பற்றி மைத்திரியுடன் பேசிக்கொண்டதாகவும் சொல்லி அதியமான் ஔவைக்கு நெல்லிக்கணி கொடுத்தது போல யாழ்ப்பாணத்து திராட்சைகளில் சிலவற்றை பகிர்ந்தளித்துக்கொண்டனராம் திராணியற்ற தலைவர்கள் இருவரும்.
இது எப்படியென்டால் ஊர் மாடுகள் எல்லாம் ஓடுதென்று சுப்பற்ற பேத்தை கண்டும் ஓடியது என்பதைப்போல இருக்கிறது என்று சில பெரியவர்கள் கூறுகின்றனர்.
பல்லுப்புடுங்கி ஆறிப்போன பழங்கஞ்சியை தட்டில் வைத்து அலையும் பேரினவாத தலைவரும், யாழ் மாவட்ட மக்களால் இனி இவர் சரிவர மாட்டார் என நிராகரித்து வீட்டில் இருத்தி வைத்த நம் ஊரு தலைவரும் அப்படி என்னாதான் பேசி எந்த ஆணியை பிடுங்கப்போகிறார்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள் யாழ் மக்கள்.
