A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து : பலர் பலி! ஒருவர் அதிரடி கைது
புதிய இணைப்பு
அக்குறணையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அலவத்துகொட காவல்துறையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கிறீட் கலவை வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு
அக்குறணை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்; மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்குறணையில் உள்ள குருகொட பகுதிக்கு அருகே, சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது சீமெந்து கலவையை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர சிறப்பு சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து அவசர சேவைகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு
அக்குறணையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து! பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
கண்டி - யாழ்ப்பாணம் A9 பிரதான வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பற்றி எரிந்துள்ளதுடன் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பல வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
இதன் காரணமாக கண்டி - மாத்தளை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.









| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |