எரிபொருள் மோசடி : இலங்கை போக்குவரத்து சபையின் 7 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
நாட்டில் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் நெருக்கடியின் போது, மகரகம டிப்போ ஊடாக 78,000 லீட்டர் எரிபொருளை வெளித்தரப்பினருக்கு விற்பனை செய்ததன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கொழும்பு பிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளர் உட்பட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
SLTB வட்டாரங்களின்படி, இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் கொழும்பு பிராந்தியத்தின் பிரதம பிராந்திய பொறியியலாளர், பிரதம பிராந்திய முகாமையாளர் (நிதி), SLTB எரிபொருள் கட்டுப்பாட்டாளர், மகரகம டிப்போ முகாமையாளர், மஹரகம டிப்போவின் உதவிச் செயல்பாட்டு முகாமையாளர், எரிபொருள் எழுதுவினைஞர் மற்றும் உதவி முகாமையாளர் (பொறியியல்) ஆகியோர் அடங்குவர்.
SLTB டிப்போக்கள் ஊடாக எரிபொருளை விநியோகம்
2022-ஆம் ஆண்டு நிலவிய எரிபொருள் நெருக்கடியின் போது, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, SLTB டிப்போக்கள் ஊடாக தனியார் போக்குவரத்து சேவைக்கு எரிபொருளை விநியோகிக்க அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி மகரகம டிப்போவிற்கு வழங்கப்பட்ட எரிபொருள் கையிருப்பிலிருந்து 78,000 லீட்டர் டீசல் விநியோகிக்கப்பட்ட போதிலும், அதற்கான பணம் SLTB-க்கு கிடைக்கப்பெறவில்லை.
சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள்
இந்த மோசடியானது மகரகம டிப்போ அதிகாரிகளுக்குத் தெரிந்தே மேற்கொள்ளப்பட்டதாகப் பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் இது குறித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் முடிவில், இடைநீக்கம் செய்யப்பட்ட ஏழு அதிகாரிகளும் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் என்று கண்டறியப்பட்டது.
இதற்கமைய, மகரகம டிப்போவிற்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கொழும்பு பிராந்தியத்தின் முதன்மை பிராந்திய முகாமையாளராகச் செயற்படுவதற்கு, பிராந்திய செயல்பாட்டு முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |