கஞ்சிபானியைக் கைது செய்வதற்கான மலேசிய நடவடிக்கை தோல்வி..! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
மலேசியாவில் பாதாள உலக குற்றவாளி "கஞ்சிபானி இம்ரான்" என்பவரைக் கைது செய்வதில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தமது நடவடிக்கை தோல்வி என்ற கருத்துக்களை காவல்துறை நிராகரித்துள்ளது. அந்த நடவடிக்கையானது ஒரு வெளிநாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைக் கையாள்வதை உள்ளடக்கியதாக இருந்தது என்றும் அது கூறியுள்ளது.
ஊடகங்களிடம் பேசிய உதவி காவல் கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் காவல்துறை நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
சொந்த நாட்டில் செயல்படுவது போல் வெளிநாடுகளில் செயற்படமுடியாது
தங்கள் சொந்த அதிகார வரம்பில் செயல்படுவது போலவே இலங்கை அதிகாரிகள் ஒரு வெளிநாட்டில் செயல்பட முடியாது என்று அவர் விளக்கினார்.

இந்தச் சூழ்நிலையை, ஒருவர் தனது சொந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியின் புவியியல் மற்றும் நடைமுறைகளுடன் பரிச்சயமில்லாமல் இருப்பதைப் போன்றது என்று அவர் ஒப்பிட்டார்.
மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது
எனவே, மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது என்றும், மாறாக வெளிநாட்டு சட்ட மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும் என்றும் ஒலுகல கூறினார்.
