இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் மற்றுமொரு நாடு
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாமுடன் நடைபெற்ற சந்திப்பையடுத்தே, அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில் மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாமுவை பிரதமர் தினேஷ் குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு உறவுகள் குறித்து சந்திப்பு
அத்துடன், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு பட்லி ஹிஷாம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இரண்டு விமான நிறுவனங்கள்
மலேசிய விமான சேவை, இலங்கையில் மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதுடன், எயார் ஏசியா மற்றும் பதிக் எயார் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் கோலாலம்பூருக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவைகளை மேற்கொள்ள இணங்கியுள்ளன.
இதேவேளை, மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சிலரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் பட்லி ஹிஷாம் கூறியுள்ளார்.
மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாரிய போக்குவரத்துக்கு இலங்கை ஒரு முக்கிய விமான மையமாக இருக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே கத்தார் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
