எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்..!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகள் மனம் திருந்திக் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார்? மனம் திரும்புதலாகிய செயலின் மூலமாக ஒருவர் பாவமன்னிப்பைப் பெறமுடியும் என்று அர்த்தமல்ல.
இதனை விளக்கும் வாசகங்கள் பைபிளில் உண்டு. (கொரிந்தியர் பத்தாம் பதினொரம் அதிகாரங்கள்) இது பற்றி எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை.
ஒன்றின் காரணமாக மற்றொரு காரியம் நிகழ்வதற்கும் (Cause – மூலம்), ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது என்று சொல்லுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
ஒருவன் நீதிமானாகிறபோது மாத்திரமே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையை அடைய முடியும். அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith Alone).
ஆகவே நீதிமான் என்ற தகுதியைப் பாவம் செய்தவனுக்கு வழங்குகின்ற கிருபையின் கருவியாக (Instrumental Means) இருப்பதே விசுவாசம்.
விசுவாசத்தின் மூலம் நீதிமானாகிற ஒருவனுடைய பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப்படுகின்றன.
ஒருவருடைய மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக மாத்திரம் ஒருவர் பாவமன்னிப்பை அடைகிறார் என்று பொருள்கொள்ள முடியாது.
ஆகவே குற்றவாளிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து யாரை நோக்கி வரும்? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றம் மாத்திரமா? இல்லையே! போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு அல்லவா?
இலங்கைத்தீவு மக்கள் என்ற விசுவாசம்
இவை பற்றியெல்லாம் சுட்டிகட்காட்டிப் பேச மறுக்கும் மல்கம் ரஞ்சித், முதலில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த ”இலங்கைத்தீவு மக்கள்” என்ற விசுவாசத்தின் மூலம் தன்னை நீதிமானாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் மற்றைய குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.
சிங்களக் கத்தோலிக்க மக்கள், பௌத்த சிங்களவர்கள் என்ற உணர்வை மாத்திரம் முன்னிலைப்படுத்தி நீதிமானாகிவிட முடியாது என்பதை பேராயர் மல்கம் ரஞ்சித் புரிந்துகொள்ள வேண்டும். இதனைப் புரிய மறுக்கப் பேராயர் சிறுபிள்ளை அல்ல.
வத்திக்கானில் உள்ள திருத்தந்தையின் “கர்தினால்” என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து மல்கம் ரஞ்சித் முதலில் வெளியே வர வேண்டும்.