கைகோர்க்கும் இரு சுற்றுலா நாடுகள்! இலங்கைக்கு பாரிய இலாபம்
இலங்கைக்கும், மாலைதீவிற்கும் இடையிலான விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விரிவாக்கப்பட்ட விமானசேவைகளானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மாலைதீவு மற்றும் கொழும்பிற்கு இடையில் வாராந்தம் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்கள் இயங்கவுள்ளன.
பொருளாதார வளர்ச்சி
இந்த மூலோபாய விரிவாக்கம் மாலைதீவு மற்றும் இலங்கைக்கிடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றத்தை மேம்படுத்த உதவுவது மாத்திரமல்லாது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாலைதீவின் முகாமைத்துவப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவையை விரிவாக்கும் முயற்சியானது இரு நாடுகளுக்கும் வணிக ரீதியிலான முன்னேற்றங்களை பெற உதவுவதாக கூறியிருந்தார்.
மேலும் இந்த விமான சேவை விரிவாக்கத்திற்கு மாலைதீவின் பொது விற்பனை முகவராக (GSA) இலங்கையைச் சேர்ந்த Nawaloka Air Services Pvt Ltd நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவிரவும் இந்த விமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு, விமானச்சீட்டுக்களை முன்பதிவு செய்யக்கூடிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இணையத்தளம் வாயிலாகவும் கையடக்கத்தொலைபேசி செயலிகள் மூலமாகவும் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும்.
வழித்தட அட்டவணை
இதன் வாயிலாக பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதற்கும் இறுதி நேர தாமதங்களை சீர்ப்படுத்தவும் முடியும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் புறப்படும் விமானங்களில் பயண வழித்தட அட்டவணை வழங்கப்படும், அந்த அட்டவணையானது வணிகப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விமான சேவைகளின் வாயிலாக இலங்கை மீண்டும் தனது சுற்றுலாத்துறையை மீட்டெடுத்து வளர்ச்சிக்கான வாய்ப்பாக அமைவது மாத்திரமன்றி இரு நாடுகளின் சுற்றுலாத்துறையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |