காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதவான்
பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நோக்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து பொது அறிவுடன் விசாரணை நடத்துமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அபின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மாவா எனப்படும் போதைப்பொருள் பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் முதல் நடவடிக்கை என சுட்டிக்காட்டிய நீதவான், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பாடசாலை மாணவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
காவல்துறைக்கு எச்சரிக்கை
மோதர, மட்டக்குளி, மருதானை உள்ளிட்ட பிரதேசங்களைச் சூழவுள்ள அபின் பாவனையில் உற்பத்தி செய்யப்படும் மாவா என்ற போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் பலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் காவல்துறைக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையான கடத்தல்காரர்களை கைது செய்யுங்கள்
சில விற்பனையாளர்கள் மாத்திரமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான், உண்மையான கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எச்சரித்தார்.
போதைப்பொருள் விற்பனைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு வழங்கியது யார் என வினவியதுடன், சந்தேகநபர்களிடம் உண்மையை வெளிப்படுத்தி 'மாவா' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கஞ்சா பயன்படுத்துவது, பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் முதல் படியாகும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |