வெளிநாடொன்றில் அமெரிக்க இராணுவ விமானம் மீது கோடரி தாக்குதல்
அயர்லாந்தின் ஷானன் விமான நிலையத்தில் நேற்று(11)சனிக்கிழமையன்று நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ விமானத்தின் மீது ஏறிய ஒருவர் , கோடரியால் அதன் விமான உடற்பகுதியையும் இறக்கையையும் சேதப்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்து ஊடகங்களின்படி, C-130 ஹெர்குலஸ் இராணுவப் போக்குவரத்து விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்டு, கனடாவில் நின்று, வெள்ளிக்கிழமையன்று அயர்லாந்தின் ஷானன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலைய சுற்றுவேலியை மீறிச் சென்று தாக்குதல்
சந்தேக நபர் விமான நிலையத்தின் சுற்று வேலியை மீறி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து, அதன் மீது ஏறி, கோடரியால் தாக்கினார். இந்தச் சம்பவத்தால், ஆயுதமேந்திய காவல்துறையினர் தலையிடுவதற்கு முன்பு, விமான நிலையத்தின் செயல்பாடுகள் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
சந்தேக நபர் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அயர்லாந்து காவல்துறை (கார்டா) தெரிவித்துள்ளது.
விமானம் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கடந்த மே மாதம் முதல் ஷானன் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள் மூன்று தனித்தனி சம்பவங்களில் குறிவைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |