100க்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய கண்டி இளைஞன்!
கண்டியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 100 சிறுவர் ஆபாச வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம் என்ற சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்ட பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கண்காணிக்கும் பொருட்டு கடந்த மாதம் கொழும்பில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 17 முதல் ஜூலை 28 வரை பல்வேறு சாதனங்கள் மூலம் இலங்கையிலிருந்து 17,000 க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரிய விசாரணைகளின் பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக சந்தேகநபரின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைகளின் எந்தவொரு ஆபாசப் பொருளையும் இணையம் அல்லது சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், யூடியூப் அல்லது இமோ போன்ற எந்தவொரு சாதனங்களின் மூலமும் பதிவேற்றியவுடன், அவர்களின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை சில நிமிடங்களிலேயே அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்ட புதிய அலகு தற்போது இருப்பதாகவும் அஜித் ரோஹண கூறினார்.