யாழில் உணவருந்த வீட்டுக்கு சென்ற பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த துயரம்
உணவருந்த வீட்டுக்கு சென்ற பேருந்து நடத்துனர் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் (12) இடம்பெற்ற இந்தசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் நடத்துனராக பணி
கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக கோண்டாவில் பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்றையதினம் மதிய உணவுக்காக துவிச்சக்கர வண்டியில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
வீதியை கடக்க முற்பட்டவேளை நிகழ்ந்த அனர்த்தம்
கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த வான் அவர் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
